குணசீலன் மீதான படுகொலையை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் -EPDP
வாழைச்சேனையில் கடந்த 20 ஆம் திகதி T.M.V.P யினரால் கடத்தப்பட்ட எமது உறுப்பினர் காளியப்பன் குணசீலன் (27.06.2008) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஒரு பிள்ளையின் தந்தையான இவரை T.M.V.P யின் வாழைச்சேனை பொறுப்பாளர் அஜித் தலைமையிலான குழுவினர் கடத்திச் சென்றனர். இது தொடர்பான முறைப்பாட்டை வாழைச்சேனை பொலிஸில் செய்திருந்தோம். அது தொடர்பில் இதுவரை பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. ஆனால் எமது உறுப்பினர் மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்கள் செய்யப்பட்டுள்ளன. நாம் சட்டத்தை மதிக்கின்றோம். சட்டம் தனது கடமையை எமது முறைப்பாடு தொடர்பில் சரியாகச் செய்யவில்லையே என்ற கவலை எமக்கு உண்டு. தமிழ் மக்களுக்குத் தெரியும், நாம் கொலை, கொள்ளை, மிரட்டல் போன்ற மக்களை வதைக்கும் காரியங்களில் ஈடுபடுபவர்கள் அல்லவென்று. எனவே எமது உறுப்பினர் குணசீலனை வெட்டிப் படுகொலை செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். எமது முறைப்பாடுகளுக்கு அமைய விசாரணைகள் நடைபெற்று மக்களுக்கு நியாயம் கிடைக்க வழி செய்யப்படல் வேண்டும். எமது உறுப்பினர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதையும், தொடர்ந்தும் எமது உறுப்பினர்கள் அச்சுறுத்தப்படுவதையும் நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். மக்களையும், மக்களின் சேவகர்களாகிய எம்மையும் அச்சுறுத்தும் வன்முறையாளர்களை சட்டத்தின் முன்னால் நிறுத்தி உரிய தண்டனை கிடைக்கச் செய்வதாலேயே இயல்புச் சூழலை ஏற்படுத்த முடியும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தகவல் தொடர்பு செயலாளர் -ஈழ மக்கள் ஐனநாயகக்கட்சி ஈ.பி.டி.பி
Average Rating