அவசர சிகிச்சை அவசியம்!!

Read Time:4 Minute, 28 Second

சாலை விபத்தில் ஒருவர் அடிபட்டால் ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் மனிதாபிமானம் எல்லோரிடமும் இருக்கிறது. இதுவே ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார் எனும்போது வேடிக்கை மட்டும்தான் பார்க்க முடிகிறது. போலீஸ் கேஸ் ஆகிவிடும் என்கிற அச்சமே இதற்குக் காரணம்.

இதையும் மீறி ஒரு சிலர் கத்தியால் குத்துப்பட்டவரின் உயிரைக் காக்கும் பொருட்டு அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் அங்கோ முதல் தகவல் அறிக்கை (FIR) கொண்டு வர வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்து அவர்கள் வருவதற்குள் நோயாளி உயிருக்கு ஏதேனும் ஆகிவிட்டால் என்ன செய்ய முடியும்? குற்றச் செயல்களால் தாக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுத்தால் என்ன செய்வது? வழக்கறிஞர் வாஞ்சிநாதனிடம் கேட்டோம்.

‘‘அவசர சிகிச்சை தேவைப்படுகிறது என்றால் எதைப் பற்றியும் யோசிக்காமல் துரிதமாக சிகிச்சையளித்து உயிரைக் காப்பாற்றுவதற்கு முனைய வேண்டும். விபத்தோ, கத்திக்குத்தோ, துப்பாக்கிச்சூடோ – அதைப் பற்றியெல்லாம் மருத்துவர்கள் ஒரு போதும் யோசிக்கக் கூடாது. இதற்கென ஒரு அரசாணையே பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி மனிதாபிமானத்தோடு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்க்கிறவர்களை எந்த நிர்பந்தங்களுக்கும் உட்படுத்தக் கூடாது.

சிகிச்சைக்காக அனுமதித்த பிறகு அவர் தனது வேலைகளுக்காக செல்ல நினைத்தால் அவரைத் தடுக்கக்கூடாது. காவல்துறையினரே கூட அவர் விருப்பப்பட்டாலே ஒழிய மற்றபடி சாட்சியாக வர வேண்டும் என கட்டாயப்படுத்தக்கூடாது. தலையில் வெட்டுப்பட்ட ஒருவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது மருத்துவரோ, மருத்துவமனை நிர்வாகமோ மறுக்காமல் சிகிச்சையளிக்க வேண்டும். முதல் தகவல் அறிக்கை இருந்தால்தான் சிகிச்சை தருவோம் அல்லது பணம் கட்ட வேண்டும் என்று கூறி சிகிச்சைஅளிக்க மறுத்தால் வழக்கு தொடர முடியும்.

இந்திய மருத்துவச் சட்டத்தின்படி ‘தொழில் ரீதியான ஒழுங்கீனம்’ என இந்திய மருத்துவ சங்கத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவர்/நிர்வாகம் மீது புகார் அளிக்கலாம். அவர்கள் விசாரணை நடத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வர். முதல் தகவல் அறிக்கை பெற்று வருவதற்குள் தலையில் வெட்டுப்பட்டவர் இறந்து விட்டால் இந்திய தண்டனைச் சட்டம் 304ஏ பிரிவின் கீழ் அலட்சியத்துக்காக வழக்கு தொடர முடியும்.

சேவை குறைபாடு என நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அந்த மருத்துவர்/நிர்வாகம் மீது வழக்கு தொடர்ந்து நஷ்ட ஈடு வாங்கலாம். உயிர்சேதம் ஏற்படுத்தியதாக சிவில் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர முடியும். மருத்துவரின் குற்றத்துக்கு மருத்துவமனை நிர்வாகமும் பொறுப்பேற்க வேண்டும். மருத்துவருக்கு உடந்தையாக இருந்ததாக மருத்துவமனை நிர்வாகத்தின் மீதும் வழக்கு தொடரலாம்’’ என்கிறார் வாஞ்சிநாதன்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post BiggBoss 2 ஜுன் மாதம் ஆரம்பம்?
Next post ரகுமானுடன் வீதிக்கு இறங்கிய தாய் – ஏற்பட்ட தர்மசங்கடம்!