சமோவா குட்டித் தீவில் பயங்கர நில நடுக்கம்: 7 ரிக்டரில் பதிவானது- சுனாமி எச்சரிக்கை
பசிபிக் கடல் பகுதியில் உள்ள குட்டித் தீவு சமோவா. இங்குள்ள டோங்கான் நகருக்கு அருகே கடலுக்கு அடியில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 7 புள்ளிகளாகத் பதிவானது. கடலுக்கு அடியில் 290 கி.மீ. ஆழத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டது.
கடலில் சுனாமி பேரலைகள் எழும் வாய்ப்பு உள்ளதாக பசிபிக் கடல் பகுதிகளில் உள்ள நாடுகளை ஹவாய் தீவில் உள்ள சுனாமி மையம் எச்சரித்தது.
நில நடுக்கம் ஏற்பட்ட 2 மணி நேரத்தில் சமோவா கடற்கரை பகுதிகளில் சுனாமி பேரலைகள் தாக்கியது. ஆனாலும் இதனால் பேரழிவு ஏதும் ஏற்படவில்லை. தாழ்வான பகுதிகளில் கடல் நீர் புகுந்தது.
நில நடுக்கத்தால் பெரிய அளவில் உயிர் சேதமோ, கட்டிடங்களுக்கு சேதமோ ஏற்படவில்லை. இப்போது சுனாமி ஆபத்து நீங்கி விட்டது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும் கடல் பகுதியில் தொடர்ந்து கொந்தளிப்பு காணப்படுகிறது. கடலுக்கு அடியில் நீரோட்டம் இருப்பதால் படகுகள், கப்பல்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.