சிறுகதை-வாக்கு!! (மகளிர் பக்கம்)

Read Time:23 Minute, 29 Second

நாதஸ்வர ஓசை காதுகளில் தேனாய்பாய்ந்து பரவசத்தில் ஆழ்த்தியது. இடுப்பில் கட்டியிருந்த கரை வேஷ்டி அவிழ்ந்து விழாதக் குறையாய் அங்குமிங்கும் ஓடி ஓடி கல்யாணத்திற்கு வருகிறவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தார் சிங்காரவேல்.மூத்த மகள் மோகனாவிற்கு கல்யாணம். முகூர்த்தத்திற்கு இன்னும் சில நிமிடங்களே இருந்தது. சிங்காரவேலின் முகத்தில் துளி கூட சந்தோஷம் இல்லை. ஒருவித இறுக்கம் படர்ந்திருந்தது. இதயம் படபடப்பாய் துடித்தது. இந்த கல்யாணம் நடக்குமா? மனசுக்குள்ள அச்சமாய் மிகப்பெரிய வினாக்குறி எழுந்தது. மணமேடையில் பட்டுச்சேலையில் மணக்கோலத்தில் தலை குனிந்து அமர்ந்திருந்தாள் மோகனா. கல்யாணத்துக்கு முந்தைய சடங்குகள் நடந்து கொண்டிருந்தது.

அடுத்ததாய் மாப்பிள்ளையை உட்கார வைத்து சடங்கு செய்வார்கள், பிறகு இருவருக்கும் முகூர்த்த உடைகள் கொடுக்கப்பட்டு அதை மாற்றிக் கொண்டு வந்ததும் மாலை மாற்றி கல்யாணம்.
நடேசன் வந்து விடுவானா? சொன்னபடி வந்துவிடுவானா? வாக்கு கொடுத்தபடி அவன், தான் கேட்டதைக் கொண்டு வந்து தந்தால்தான் இந்த கல்யாணமே நடக்கும். இல்லாவிட்டால் அவ்வளவுதான்… அவமானம்தான்… தலைகுனிவுதான்.

மோகனாவின் கழுத்தில் தாலி ஏறவே இயலாது. நேற்றைக்கே மாப்பிள்ளை வீட்டில் கேட்டார்கள். இவர்தான் அதை இதை சொல்லி சமாளித்தார்.‘தாலி கட்டறதுக்கு முந்தி இருக்கிற ஐந்து சவரனையும் நாங்க மாப்பிள்ளைக்கு போட்டு விடுவோம்…’உறுதியாக வாக்கு கொடுத்திருந்தார். இருபது சவரன் புரட்டவே போதும் போதுமென்று ஆகிவிட்டது. வீட்டு பத்திரத்தை அடகு வைத்து தான் கல்யாணத்துக்கு தேவையான பணத்தை புரட்டினார். இருபத்தி ஐந்து சவரனில் இருபது சவரன் வாங்கிவிட்டார்.

இன்னும் ஐந்து சவரன்தான் மிச்சம். மாப்பிள்ளைக்கு கைசெயினும், கழுத்து செயினும்தான் செய்யணும். அதற்காகத்தான் நடேசனிடம் உதவி கேட்டிருந்தார். நடேசன் அவருடைய பால்ய சிநேகிதன். இருவரும் சின்ன வயதிலிருந்து ஒன்றாக படித்தவர்கள். இன்றைக்கு நடேசன் வசதி வாய்ப்புகளோடு இருக்கிறார். இரண்டு மகன்களும் வெளிநாட்டில் வேலை பார்த்து நிறைய சம்பாதிக்கிறார்கள்.

மனைவியும் அவரும் தனியாக வசிக்கிறார்கள்.மகன்கள் இருவரும் அப்பாவுக்கு என்று ஒரு தொகை அனுப்பி விடுவார்கள். நடேசன் கவர்மென்ட் உத்தியோகம் பார்த்தவர். பென்ஷன் வேறு வருகிறது. அதனால்தான் துணிந்து கேட்டார். நடேசன் தயங்கவில்லை.

‘‘அதனாலென்ன தந்துட்டா போச்சு…’’
“அஞ்சு சவரனும் இன்னைக்கி இரண்டு
லட்சத்துக்கு மேல் வரும் டா…”

“பரவாயில்லை… ரெண்டு லட்சம் ஒன்னும் பெரிய விஷயம் இல்லை. நான் எப்படியாவது உதவிடுறேன்… கவலைப்படாதே…”அழுத்தம் திருத்தமாய் வாக்குறுதி கொடுத்திருந்தார் நடேசன். அதை நம்பிக்கொண்டுதான் வேறு யாரிடமும் கடன் கேட்கவில்லை. முன்னமே தெரிந்திருந்தாலும் எங்காவது கடன் வாங்கி இருக்கலாம். இப்போது எல்லாமே கெட்டு விட்டது. என்னாகப் போகிறதோ… கோமதியின் முகத்தை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. சாதாரணமாகவே கடுகடுவென்று இருப்பாள். மகளுக்கு தாலி ஏறப்போகிற நேரத்தில் இப்படி ஒரு பிரச்னை வந்தால் அவளால் தாங்க முடியுமா?

மனசு எரிமலையாய் குமுறிக் கொண்டிருந்தது. அத்தனை கூட்டத்திலும் இவரை தேடி வந்து தனியே இழுத்து போய் கிசுகிசுப்பாய் கேட்டாள்.
‘‘என்னங்க ஆச்சு? இன்னும் வரலையா அந்த ஆளு?’’

“சும்மா இரு. அந்த ஆளுண்ணெல்லாம்
பேசாதே…”“வேறு எப்படி பேசறது? நம்ப வச்சு கழுத்தை அறுத்துட்டானே!”
“மரியாதையா பேசு…”“மரியாதை வேற கேட்குதா? என் பொண்ணோட கல்யாணமே நின்னு போகப்
போகுதே…” கோமதி அழத் தொடங்கினாள்.

“யாராவது பாத்தா அசிங்கமாயிடும்…”
“இன்னும் கொஞ்ச நேரத்துல மண்டபமே வேடிக்கை பார்க்க போகிறது… அப்ப என்ன செய்ய போறீங்க? யார் கேட்டாலும் உதவி செய்வீங்க… இன்னைக்கு நம்ம ெபாண்ணு கல்யாணத்துக்கு யாரும் உதவி செய்யல…மண்டபம் வர கூட்டி வந்து தாலி கட்ட போறப்ப கல்யாணம் நின்னுப் போச்சுன்னா தலைநிமிர்ந்து நடக்க முடியுமா? என்னையும் என் பொண்ணையும் நடுரோட்டுல நிறுத்திட்டீங்களே!” கோமதி விண்ணினாள். சாதாரணமாக கோமதி அமைதியாகத்தான் இருப்பாள். யாரிடமும் அதிகமாக பேச மாட்டாள். வாயை திறந்து விட்டால் அவ்வளவு சீக்கிரத்தில் மூட மாட்டாள். ஒருவரை பிடிக்கவில்லை என்றால் கரித்துக் கொட்டிக் கொண்டே இருப்பாள். நடேசனை அவளுக்கு சுத்தமாக பிடிக்காது.

‘‘நம்மை விட வசதி வாய்ப்பாக வாழ்கிறாரே…’’ என்று பொறாமை கொண்டே இருப்பாள். இப்போது கொடுத்த வாக்கை காப்பாற்றாமல் கழுத்தறுத்து விட்டார் என்றதும் அந்த கோபம் ஆயிரம் மடங்கு அதிகரித்தது.சாதாரண குடும்ப விஷயமா அதை இதை சொல்லி சமாளிக்க… இது கல்யாண விஷயம். தாலி கட்டும் நேரம் எப்படியும் வந்து விடுவார் என்று நினைத்தவர்…
வராமல் போனால் என்ன செய்வது?

உள்ளுக்குள் பயம் கண்ணாடி சீசாவினால் கீறியது மாதிரி திகுதிகுவென எரிந்தது. ‘‘டேய் பாவி ஏண்டா இப்படி பண்ணுன?’’
நடேசன் மீது கோபம் கோபமாக வந்தது. ‘‘என்ன ஆச்சு ரெண்டு பேரும் இங்கே வந்து நிக்கிறீங்க? மணமேடைக்கு போங்க. மாப்பிள்ளைக்கு இன்னும் சீர் செய்யலையாமே?’’
மாப்பிள்ளை வீட்டு நெருங்கிய உறவினர் ஒருவர் இருவரையும் மணமேடை பக்கம் அழைத்தார்.

‘‘இதோ வந்துட்டோம்…’’
‘‘மாப்பிள்ளைக்கான நகை எல்லாம் வந்துட்டுதானே?’’‘‘இப்ப வந்துரும். நகைக்கடைக்கு ஆள் அனுப்பி இருக்கோம். அதான் எதிர்பார்த்து நிற்கிறோம்…’’
‘‘என்ன நீங்க பொறுப்பு இல்லாம நடந்துக்குறீங்க… இதையெல்லாம் முன்கூட்டியே வாங்கி வச்சிக்கிறது இல்லையா?’’ சிங்காரவேலின் தவிப்பும் மனக் கஷ்டமும் அவருக்கு எங்ேக தெரியப் போகிறது?

என்னமோ தான் பணத்தை லட்ச லட்சமாய் கொட்டி வைத்திருப்பவர் மாதிரியும் அதை செலவு பண்ண யோசிப்பது மாதிரியும் அவர் பேசுவது வேடிக்கையாக இருந்தது. ‘‘டேய் நடேசா சீக்கிரம் வந்து தொலைடா…’’ஆண்கள் அழக்கூடாது எந்த சூழ்நிலையிலும். உறுதியாக இருக்க வேண்டும். ஆனால் தன் உறுதி தூள் தூளாய் நொறுங்கிப் போய் விடுமோ என உதறலாக இருந்தது. சிரமப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டார். தளர்வாய் மண மேடையை நோக்கி நடந்தார் சிங்காரவேல். பரிதவிப்பாய் அவரை பின் தொடர்ந்தாள் பூரணி.

சிங்காரவேலுக்கு சொந்தமாக மளிகை கடை இருந்தது. நகரிலேயே பெரிய கடை. பெரிய கடை லாபகரமாகத்தான் இயங்கிக் ெகாண்டிருந்தது. கடையில் அவருக்கு கீேழ ஐந்து பேர் வேலை செய்து கொண்டிருந்தார்கள். எல்ேலாருக்கும் தின சம்பளம். பெரும்பாலான நேரங்களில் கடையிலேயே தான் இருப்பார். வேளாவேளைக்கு சாப்பாடு கொடுத்து அனுப்பி விடுவாள் பூரணி. மூத்தவள் மோகனா. மோகனாவுக்கு கீழே சரசு. கடைக்குட்டி முத்துவேல்… அழகான குடும்பம். சிங்காரவேல் எல்லோரையும் நம்புவார். முன்பின் தெரியாதவருக்கு கூட உதவி செய்வார். சிறு சிறு வியாபாரிகள் சுற்றுப்புற கிராமங்களில் கடை நடத்தும் எல்லோரும் அவர் கடையில்தான் மொத்தமாய் மளிகை பொருட்களை வாங்கிப் போவார்கள்.

சிலர் கடன் சொல்லவே மாட்டார்கள். வாங்கும் பொருளுக்கு கடன் சொல்லுவார்கள். நம்பிதான் கடன் கொடுத்தார் சிங்காரவேல். ஆரம்பத்தில் ஒழுங்காகத்தான் கடனை திருப்பி செலுத்தினார்கள்… போகப்போக ஒவ்வொருவராய் ஏமாற்ற ஆரம்பித்தார்கள். வாங்கிய கடன் தொகையை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே வேறு கடைக்கு போகத் தொடங்கி விட்டார்கள். ஏமாற்றிய ஒருவர் இருவராகி, இருவர் இருபது பேராகி… இப்படித்தான் சிங்காரவேலின் கடை நஷ்டத்தில் இயங்க தொடங்கியது. சிங்காரவேலுக்கு ஒரு அண்ணனும் இரண்டு தங்கைகளும் இருக்கிறார்கள்.

தங்கைகளை எல்லாம் இவர் தான் கல்யாணம் பண்ணி கொடுத்தார். இவர் வசதியாக இருந்தபோது வாரத்திற்கு இரண்டு தடவை வருகிற உறவுகள் இவர் சிரமப்படுகிறார் என்றதுமே தொடர்பை துண்டித்துக் கொண்டது. குப்பையில் கிடப்பவர் கோபுரத்திற்கு போவதும், கோபுரத்தில் இருப்பவர் குப்பைக்கு வீழ்வதும் உலக நியதி. வசதியாக வாழ்ந்து விட்டு வறுமைக்கு தள்ளப்பட்ட சிங்காரவேலை தூக்கி விட யாரும் இல்லை. விழுந்தவர் எழ உதவி செய்ய நாதியில்லை. கேட்டு கேட்டு வாங்குவதற்கு ஆயிரம் கைகள் நீளும். கொடுப்பதற்கு ஒருவர் கூட கையை நீட்ட மாட்டார்கள். இது வாங்குகிற உலகம், கொடுக்கிற உலகம் இல்லை.

இங்கே சிங்காரவேல் போன்ற இரக்க மனம் கொண்ட மனிதர்களுக்கு எல்லா இடத்திலுமே கஷ்டம்தான்… வேதனைதான்… ஏமாற்றம்தான்… அவமானம்தான்…
மோகனாவிற்கு வந்த வரன் நல்ல இடம். உதறித்தள்ள மனசு இல்லை. அதனால்தான் கல்யாண ஏற்பாடுகளை செய்தார். நடத்திக் கொண்டிருந்த கடையை ஏற்கனவே ஒருவரிடம் விற்றுவிட்டார். இருந்தது இந்த வீடு மட்டும்தான். சொந்த வீடு. அந்த வீட்டுப் பத்திரத்தை அடகு வைத்துதான் கல்யாணம் ஏற்பாடுகளை செய்தார்.

சகல பொருட்களையும் வாங்கினார். ஐந்து சவரன் நகை வாங்குவதற்கு மட்டும் பணம் போதவில்லை. அதற்காகத்தான் கடைசி நேரம் கையேந்தும் நிலை. நடேசனும் இவரும் படித்த காலத்தில் நடேசனுக்கு உணவு, உடைகள் என எவ்வளவோ உதவிகள் செய்திருக்கிறார். ஒரு முறை கல்லூரியில் தேர்வு நெருங்கிக் கொண்டிருந்த பொழுது அவருக்காக பணம் கட்டியது இவர்தான். அந்த நன்றி உணர்ச்சி நடேசனுக்கு எப்பவுமே உண்டு. இருவருமே ஒன்றாக படித்திருந்தாலும் நடேசன் யோகம் அவருக்கு கவர்மென்ட் வேலை கிடைத்துவிட்டது. இவருக்கு கிடைக்கவில்லை. இவர் டிகிரியில் தேர்ச்சிப் பெறவில்லை. கடைசி வருடம் இரண்டு பாடங்களில் பெயில். திரும்ப எழுதி தேர்ச்சிப் பெற்றிருந்தால் ஏதாவது ஒரு வேலைக்கு போய் இருக்கலாம். அலட்சியமாக விட்டுவிட்டார்.

‘‘ரெண்டு பேரும் ஒண்ணாதான் படிச்சோம். ஆனா, நீ வேலைக்கு போகல. நான் வேலையில் இருக்கேன். எனக்கு ரொம்ப உறுத்தலா இருக்கு!’’ சிங்காரவேலை பார்க்கிற பொழுதெல்லாம் நடேசன் வருத்தம் மேலிட சொல்லுவார்.‘‘இல்லையே! வேலைக்கு போகலைன்னாலும் நானும் நல்லாத்தான் இருக்கேன். எனக்கு என்னப்பா சிரமம்…? ஜவுளிக்கடை நல்லா போகுது. வருமானத்துக்கும் கொறைச்சல் இல்லை. நாலு பேருக்கு உதவி செய்யும் எடத்துலதான் இருக்கேன்… நான் ஒரு நாளும் அது போல வருத்தப்பட்டது இல்லை… நீ வேலை பார்க்கிறதை நெனைச்சு பொறாமைப்பட்டதும் கிடையாது… நீ நல்லா இருந்தாலும் எனக்கு சந்தோஷம்தான்….’’‘‘இருந்தாலும் என் மனசு ஆறலை. எனக்கு எவ்வளவோ உதவிகள் செய்திருக்க உனக்கு ஏதாவது செய்யணும். அப்படி செஞ்சா தான் நான் செத்தாலும் என் கட்டை வேகும். அதுக்கான தருணத்தைதான் நான் எதிர்பார்த்துட்டு இருக்கேன்’’ என்பார் நடேசன்.

எப்போதும் சொன்னதை மனதில் வைத்து கொண்டுதான் தயங்கி தயங்கி போய் உதவி கேட்டார். சந்தோஷமாக தலையாட்டியவருக்கு என்ன ஆயிற்று என தெரியவில்லை. பத்து நாட்களுக்கு முன்பே கொண்டு வந்து தருகிறேன் என்று சொன்னவர்… தாலி கட்டும் நேரத்தில் கூட வரவில்லையே. பூரணி கோவப்படுவது நியாயம்தான். பூரணியை கோபித்துக் கொள்ளக் கூடாது. நம்ப வைத்துதான் கழுத்தறுத்து விட்டான் நடேசன். ஐந்து சவரனுக்காக மோகனாவின் கல்யாணம் நின்று விடுமா? அசிங்கமாய் போய்விடுமா? இதயம் அதிவேக வேகமாய் துடித்தது. ஒரு வாரமாக நடேசன் வீட்டிற்கு அலைந்து கொண்டுதான் இருந்தார். ஆனால் வீடு எப்பவும் பூட்டியேதான் கிடந்தது.

எங்கேயாவது வெளியே போய் இருப்பாரோ என நினைத்தால் வாசலில் கோலம் போட்டதுக்கான அடையாளமே இல்லை. அப்படி என்றால் வெளியூருக்கு எங்கோ போய்விட்டார்… மறந்திருப்பாரா? செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தால் சுவிட்ச் ஆப் என்று வந்தது. நடேசனுக்கு பொய் பேச தெரியாது. சூதுவாது தெரியாது. கள்ளம் கபடம் இல்லாத மனுஷன். எப்படியும் தான் கொடுத்த வாக்கை காப்பாற்றி விடுவான் என்ற நம்பிக்கையில்தான் இந்த நிமிடம் வரை இருந்தார். அந்த நம்பிக்கை நொறுங்கிக் கொண்டிருந்தது. மோகனாவிற்கு முகூர்த்த பட்டுப்புடவை கட்டுவதற்காக மணமகளின் அறைக்கு அழைத்து போயிருந்தார்கள். மணமகனோ பட்டு வேஷ்டி சட்டை போட்டு கல்யாண மாலை அணிவித்து மணமேடையில் வந்து அமர்ந்திருந்தான்.

‘‘சம்மந்தி என்ன நிக்கிறீங்க… சொன்னபடி உங்க பொண்ணுக்கு நகையெல்லாம் போட்டுட்டீங்க… என் பிள்ளைக்கு போட்டு அழகு பார்க்க வேண்டாமா? சீக்கிரமா எடுத்து செயின், பிரேஸ்லெட்டையும் மாட்டி விடுங்க…’’ மாப்பிள்ளையின் தாய் பூரணியிடம் கிசுகிசுத்தார். பூரணி தவிப்பாய் சிங்காரவேலை பார்க்க… இப்போது வந்திருவாங்க என்றார். ‘‘என்னது நகைக் கடைக்கு ஆள் அனுப்பி இருக்கீங்களா?’’ கோவமா கேட்டவள் தன் கணவருக்கு அருகில் போய் அவருடைய காதில் ஏதோ கிசுகிசுத்தார். அவருடைய முகமும் இருண்டு போனது. மணமகனுக்கு அருகில் போய் அவனுடைய காதில் என்னமோ சொன்னார்கள். நாதஸ்வர ஓசையில் என்ன பேசினார் என்று புரியவில்லை. அவன் முறைப்பாய் பார்த்தான். சிங்காரவேலுக்கு சர்வ நாடியும் ஒடுங்கி போனது.

‘‘ஐயோ மாப்பிள்ளை மணமேடையை விட்டு எழப்போகிறாரா?’’ அழுகை முட்டியது.அப்போது வேக வேகமாய் ஓட்டுநர் சீருடை அணிந்திருந்த இளைஞன் ஒருவன் மணமேடையை நோக்கி ஓடி வந்தான். ‘‘சிங்காரவேலுங்றது யாரு?’’ என்றான் உரத்தக் குரலில்.‘‘நான்தான்…’’ குழப்பமாய் நிமிர்ந்தார். ‘‘இதை மாப்பிள்ளைக்கு போடுங்க…. கல்யாணத்தை நல்லவிதமா நடத்துங்க’’ என்றான் கையில் இருந்த மஞ்சள் பையை நீட்டியபடி. வெடுக்கென அவன் கையில் இருந்து வாங்கி மஞ்சள் பையில் இருந்ததை பிரித்து பார்த்தார்கள். செயின் இரண்டும் இருந்தது. நகைக்கடை பில்லும் இணைக்கப்பட்டிருந்தது. கேள்வி எல்லாம் கேட்காமல் ஓடிப் போய் மாப்பிள்ளைக்கு அதை அணிவித்தார். அடுத்த சில நிமிடங்களில் மணமேடையில் மோகனா வந்து அமர்ந்தாள். ‘கெட்டி மேளம் கெட்டி மேளம்…’ என்ற முழக்கம் அதிர்ந்தது.

மோகனாவின் கழுத்தில் தாலி நல்லவிதமாய் ஏறுவதை ஒரு ஓரமாய் நின்று அந்த இளைஞனும் கண்கள் மலர பார்த்தான். தாலி கழுத்தில் ஏறியதும் கையில் இருந்த அட்சதையை தூவி விட்டு மேடையை விட்டு கீழே இறங்கி மண்டபத்தின் வாசலை நோக்கி ஓடினான். சிங்காரவேலும் பின்னாலேயே ஓடினார்.‘‘தம்பி நில்லுப்பா… நீ யாருப்பா? இதையாருப்பா உன்கிட்டே கொடுத்துவிட்டது?’’ என்றார்.‘‘சார். நான் ஒரு ஆட்டோ டிரைவர். லெவல் கிராஸிங்கை தாண்டி நாலு ரோடு பிரியற இடத்துல ஒரு வயதான மனுஷன் அடிபட்டு கிடந்தார். அவரை ஹாஸ்பிட்டல்ல கொண்டு போய் சேர்க்கறதுக்காகத்தான் நான் கிட்டே போனேன்.

ஆனா, அவர் ஹாஸ்பிட்டலுக்கு வர மறுத்திட்டார். தன் கையில் இருந்த இந்த பையை கொடுத்து, தான் சொல்ற கல்யாண மண்டபத்துல இருக்கிற சிங்காரவேலுங்கிறவர் கிட்ட கொடுத்துடுன்னு கெஞ்சி கேட்டுக்கிட்டார். உயிர் போனா போகட்டும்… ஆனா, ஒரு கல்யாணம் நின்னு போயிடக் கூடாதுன்னு கையெடுத்து கும்பிட்டார். தன் மனைவிக்கு உடம்பு சரியில்லைன்னு வெளியூரில் இருக்கிற ஹாஸ்பிட்டல்ல போயி தங்கி இருந்திருக்கிறார். போன் தொலைஞ்சு போயிடுச்சாம். அதனாலதான் யாரையும் தொடர்பு கொள்ள முடியலையாம். வெளியூரில் இருந்து அவசரமா கிளம்பி விடியற்காலமே வந்து இறங்கிட்டாராம். கையில கல்யாண பத்திரிகையும் இல்லையாம்.

மண்டபத்தோட பேரும் மறந்துடுச்சாம்… அட்ரஸ் தெரியாம அலைஞ்சுகிட்டு இருந்தப்பதான் எதிர்பாராதவிதமா யாரோ காரைவிட்டு மோதி தள்ளிட்டு போயிட்டாங்க…’’ நடந்ததை விவரிக்க சிங்காரவேலுக்கு சகலமும் புரிந்தது.‘‘தம்பி அவன் என்னோட ஃபிரண்டுதான்… இப்ப எப்படிப்பா இருக்கான்? மொதல்ல ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போகணும்பா…’’ பதை பதைத்தார்.

‘சாரி சார்… மண்டபத்துக்கு வராம நான் ஹாஸ்பிட்டலுக்கு போய் இருந்தா அவரை காப்பாத்தி இருக்கலாம்…’’சொல்கிற போதே அவனுக்கு கண்கள் கலங்கி தொண்டையை அடைத்தது. விக்கித்துப்போய் நின்றார். கண்களில் இருந்து கண்ணீர் கரகரவென்று வழிந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சிறுநீரில் ரத்தமா? ஹெமாட்டூரியா… ஒரு டீடெய்ல் ரிப்போர்ட்! (மருத்துவம்)
Next post கிச்சன் டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)