கொழும்பில் புலிகள் தற்கொலை தாக்குதல்: இலங்கை ராணுவ துணைத் தளபதி பலி
Read Time:1 Minute, 15 Second
கொழும்பில் இன்று காலை நடந்த பயங்கர தற்கொலைத் தாக்குதலில் இலங்கை ராணுவத்தின் துணைத் தளபதி மேஜர் ஜெனரல் பரமி குலதுங்க கொல்லப்பட்டார். மேலும் 2 ராணுவ அதிகாரிகளும் கொல்லப்பட்டனர். கொழும்பில் இருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ள பணிபிதியா என்ற இடத்தில் தலவட்டுகொடாகொட்டவா சாலையில் இந்தச் சம்பவம் நடந்தது. மோட்டார் சைக்கிள்களில் வெடிகுண்டுகளுடன் வந்த இரு விடுதலைப் புலிகள் பரமி குலதுங்க சென்ற கார் மீது மோதினர். இதில் வெடித்து சிதறி கார் தூள் தூளானது. இச் சம்பவத்தில் குலதுங்க, 2 அதிகாரிகள், பொது மக்களில் ஒருவர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தற்கொலைத் தாக்குதல் நடத்திய இரு புலிகளும் பலியாயினர். மேலும் 9 பேரும் படுகாயமடைந்தனர். இவர்கள் கலுபவிலா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.