ஆலந்து அதிர்ச்சி தோல்வி: ஒரு கோல் போட்டு போர்ச்சுக்கல் வெற்றி
18-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனி யில் நடைபெற்று வருகிறது. நேற்று நள்ளிரவு நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் `டி’ பிரிவில் முதல் இடத்தை பிடித்த போர்ச்சுக்கல், `சி’ பிரிவில் 2-வது இடத்தை பிடித்த ஆலந்து அணிகள் மோதின. இரு அணிகளுமே பலம் வாய்ந்தவை என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது. ஆட்டத்தின் 23-வது நிமிடத்தில் போர்ச்சுக்கல் கோல் அடித்து ஆலந்துக்கு அதிர்ச்சி கொடுத்தது. பவிலட்டா பாஸ் செய்த பந்தை மனிச் ஆலந்தின் 2 பின்கள வீரர்களை ஏமாற்றி 16 மீட்டர் தூரத்தில் இருந்து அற்புதமாக கோல் அடித்தார். பதில் கோல் அடிக்க ஆலந்து வீரர்கள் கடுமையாக போராடினார்கள். அந்த அணி வீரர் ரோபின் அடித்த பந்து மயிரிழையில் கோல் கம்பத்தை விட்டு விலகி சென்றது.
முதல் பாதி ஆட்ட நேர முடிவில் போர்ச்சுக்கல் 1-0 என்ற கோல் கணக்கில் முன் னணியில் இருந்தது. முதல் பாதி ஆட்டம் முடிவதற்கு சற்று முன்பு போர்ச்சுக்கல் வீரர் கோஸ்டினா 2-வது மஞ்சள் அட்டை பெற்றார். இது சிவப்பு அட்டைக்கு சமமானது. இதனால் அவர் ஆடுகளத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
2-வது பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் முரட் டுத்தனமான ஆட்டத்தில் ஈடு பட்டனர். வீரர்கள் ஒருவரை யொருவர் தாக்கும் நிலை ஏற்பட்டது. 2-வது பாதி ஆட்டத் தில் போர்ச்சுக்கலை சேர்ந்த டிகோ, ஆலந்தை சேர்ந்த காலித் பவில், விவோனி ஆகியோர் முரட்டுத்தனமாக ஆடியதற்காக நடுவரால் சிவப்பு அட்டை காட்டப்பட்டு ஆடுகளத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
மேலும் போர்ச்சுக்கலை சேர்ந்த 9 வீரர்களும், ஆலந்தை சேர்ந்த 7 வீரர்களும் மஞ்சள் அட்டை (எச்சரிக்கை) பெற்றனர்.
பதில் கோல் அடித்து சமன் செய்ய ஆலந்து கடுமையாக போராடியது. அந்த அணி கோல் `ஆப்சைடு’ காரணமாக நிராகரிக்கப்பட்டது. இறுதி வரை ஆலந்து வீரர்களால் கோல் போட முடியவில்லை.
இதனால் போர்ச்சுக்கல் 1-0 என்ற கோல் கணக்கில் ஆலந்தை அதிர்ச்சி காரணமாக தோற்கடித்து கால் இறுதிக்கு தகுதி பெற்றது.
மிகப்பெரிய போட்டியில் போர்ச்சுக்கலால் ஆலந்து வெளியேற்றப்படுகிறது. இது 2-வது முறையாகும். இதற்கு முன்பு ஆலந்து 2004-ம் ஆண்டு ஐரோப்பிய கோப்பை அரை இறுதியில் 1-2 என்ற கணக்கில் போர்ச்சுக்கலிடம் தோற்று இருந்தது.
நேற்றைய ஆட்டத்தில் 4 சிவப்பு அட்டை மற்றும் 16 மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. அந்த அளவுக்கு இரு அணி வீரர்களும் முரட்டு ஆட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக நடந்த மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து 1-0 என்ற கோல் கணக்கில் ஈக்வடாரை தோற்கடித்தது.