4 ரஷிய பிணைக் கைதிகளையும் அல் காய்தா தீவிரவாதிகள் கொன்றனர்
இராக் தலைநகர் பாக்தாதில் தாங்கள் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்த 4 ரஷிய அரசுப் பிரதிநிதிகளையும் ஞாயிற்றுக்கிழமை கொன்றுவிட்டதாக அல் காய்தா தீவிரவாத அமைப்பின் கீழ் செயல்படும் முஜாஹிதீன் ஷூரா என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. பையோதோர் ஜாட்úஸவ், ரினட் அக்லியுலின், அனடோலி ஸ்மிர்னோவ், ஓலேக் பெடோஸ்ùஸயேவ் ஆகிய நான்கு ரஷிய அரசுப் பிரதிநிதிகளும் கடந்த 3-ம் தேதி மேற்கு பாக்தாதில் உள்ள மன்சூர் என்ற இடத்திலிருந்து துப்பாக்கி முனையில் அல் காய்தா தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டனர். விடாலி டிடோவ் என்பவர் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இறந்தார். செசன்யாவிலிருந்து ரஷிய படைகள் உடனடியாக வாபஸ் பெறவேண்டும், முஸ்லிம் கைதிகளை விடுதலை செய்யவேண்டும். என்று அல் காய்தா தீவிரவாத அமைப்பு கூறியிருந்தது.
இந்நிலையில் எங்கள் கோரிக்கையை ஏற்க ரஷியா தவறிவிட்டதால் பிணையாளிகளைக் கொன்றுவிட்டோம் என்று அல் காய்தா தீவிரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் 4 பிணையாளிகளில் ஒருவர் கழுத்தை அறுத்து கொல்லப்படும் காட்சியையும், 2-வது நபர் ரத்த வெள்ளத்தில் கிடக்கும் காட்சியையும், 3-வது நபர் முகமூடியுடன் கைவிலங்கிடப்பட்டு முழங்கால் போட்டு அமர்ந்திருந்த காட்சியையும் விடியோவில் பதிவு செய்து தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர்.