கலப்பு திருமணம் செய்யும் தம்பதிக்கு ரூ.50 ஆயிரம்: உ.பி. அரசு வழங்குகிறது!!
உத்தரபிரதேசத்தில் சாதி – மத பாகுபாடுகளை களைய மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி கலப்பு திருமணம் செய்யும் தம்பதிக்கு ரூ.50 ஆயிரம் நிதி உதவியும், பதக்கம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக இந்த திட்டத்தின் கீழ் திருமணம் செய்த 8 தம்பதிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். வருகிற பிப்ரவரி 8–ந்தேதி மீரட்டில் காதலர்கள் தினத்தையொட்டி நடைபெறும் விழாவில் 8 தம்பதிக்கும் மாநில அரசு சார்பில் தலா ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படுகிறது.
உ.பி. அரசின் இந்த திட்டத்தை மீரட் மாவட்ட கலெக்டர் அறிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:–
உத்தரப்பிரதேசம் முழுவதும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மீரட்டில் கலெக்டர் அலுவலகத்தில் முதல் கட்டமாக 8 தம்பதி தலா ரூ.50 ஆயிரம் நிதி பெறுகிறார்கள். திருமணம் செய்யும் மணமக்களில் யாராவது ஒருவர் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் இதற்கு வருமான உச்ச வரம்பு எதுவும் கிடையாது.
தகுதியும் விருப்பமும் உள்ள தம்பதிகள் மாவட்ட கலெக்டர்களிடம் திருமண சான்றிதழை காட்டி பதிவு செய்து கொள்ள வேண்டும். அவர் விசாரணை நடத்தி சரிபார்த்து ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகையை அவர்கள் பெயருக்கு காசோலையாக வழங்குவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Average Rating