வலியவன் (திரைவிமர்சனம்)!!

Read Time:5 Minute, 45 Second

valiyavanஆண்ட்ரியா தனியார் வங்கியில் வேலை செய்து வருகிறார். இவருடன் ஜெய்யின் அப்பாவான அழகம் பெருமாளும் வேலை செய்து வருகிறார். அழகம் பெருமாள் எப்போதும் ஆண்ட்ரியாவிடம் சுக துக்கங்களை பகிர்ந்து வருகிறார்.
ஒருநாள் ஜெய், அப்பா அழகம் பெருமாள், அம்மா அனுபமா குமார் ஆகியோர் குடும்பத்தோடு ஷாப்பிங் மாலுக்கு செல்கிறார்கள். அங்கு பாக்ஸரான ஆரூண் சௌத்ரியுடன் பிரச்சினை ஏற்படுகிறது. இதில் ஜெய் மற்றும் அழகம் பெருமாளை ஆரூண் அடித்து விடுகிறார்.

இதனால் ஜெய் மற்றும் அழகம் பெருமாள் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். இந்த பாதிப்பு ஒருவரை ஒருவர் முகம் கொடுத்து பார்க்க முடியாத அளவிற்கு செல்கிறது. இதனால் ஜெய் வீட்டில் இருந்து வெளியேறி, நண்பருடன் இருந்துகொண்டு வேலைக்குச் செல்கிறார்.

தனக்கு நேர்ந்த வேதனையான சம்பவத்தை அழகம் பெருமாள் தன்னுடன் வேலை பார்க்கும் ஆண்ட்ரியாவிடம் பகிர்ந்துகொள்கிறார். மேலும் என் மகன் ஜெய், ஆரூணை அடித்திருந்தால் நான் சந்தோஷப்பட்டிருப்பேன் என்று கூறுகிறார். இதைக் கேட்ட ஆண்ட்ரியா, ஜெய்யை ஒருநாள் வழியில் பார்த்து காதலை சொல்லிவிட்டு செல்கிறார்.

ஜெய்க்கு ஆண்ட்ரியா யார் என்று தெரியாத நிலையில், ஆண்ட்ரியாவை தேடி அலைகிறார். ஒரு வழியாக ஆண்ட்ரியாவே, ஜெய்யை தேடி வருகிறார். பின்னர் ஜெய் தன் காதலை கூறுகிறார். ஆனால், ஆண்ட்ரியாவோ நான் உன்னை காதலிக்க வேண்டும் என்றால், ஒருவனை அடிக்கணும் என்று கூறி மாலில் அசிங்கப்பட்ட ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற பாக்ஸர் ஆரூணை காண்பிக்கிறார். ஜெய்யும் ஆரூணை எதிர்க்கொள்ள தயாராகிறார்.
சண்டைக்கு ஆயத்தமான ஜெய், பாக்ஸர் ஆரூணை ஜெயித்தாரா? ஆண்ட்ரியாவுடன் காதல் கைகூடியதா? என்பதே மீதிக்கதை.

படத்தில் ஜெய் முதல் பாதியில் வழக்கமான அப்பாவி ஜெய்யாகவே பார்க்க முடிகிறது. பிற்பாதியில் வெறி கொண்ட இளைஞனாகவும் முரட்டுத்தனமாகவும் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஜெய் இந்த படத்தில் தன்னை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்று கடுமையாக உழைத்திருக்கிறார். சிக்ஸ் பேக்கில் உடலை அருமையாக தயார்படுத்தியிருக்கிறார். கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் நன்றாகவே நடித்திருக்கிறார். ஆண்ட்ரியாவுடன் ஜெய் குடித்துவிட்டு செய்யும் ரகளைகள் ரசிக்கும்படி உள்ளது.

படம் முழுக்க அழகு பதுமையாக வந்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் ஆண்ட்ரியா. இவருடைய சோலோ சாங்கில் ரசிகர்களை கவர்ச்சியால் கட்டிவைத்திருக்கிறார். வில்லனாக வரும் ஆரூண் பாக்ஸருக்கான உடல் கட்டோடு சிறப்பாக கதாபாத்திரத்திற்கு பொருந்தியிருக்கிறார்.

காமெடிக்காக நடித்திருக்கும் பாலாவிற்கு படத்தில் வேலையே இல்லை. பெரிதாக இவருடைய காமெடி எடுபடவில்லை. அனுபவம் வாய்ந்த நடிப்பால் மனதில் பதிந்திருக்கிறார் அழகம் பெருமாள். பாசமான அம்மாவாக நடித்திருக்கிறார் அனுபமா குமார்.

எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி ஆகிய படங்களை எடுத்த சரவணனா இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் என்று ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார். முதல் பாதியில் படத்தில் நகைச்சுவை என்ற பெயரில் இவர் பதிவு செய்திருக்கும் காட்சிகள் ஏற்கும்படியாக இல்லை. இரண்டாம் பாதியில் கடைசி 20 நிமிடம் மட்டுமே விறுவிறுப்பாக எடுத்திருக்கிறார். நல்ல நடிகர்களை வைத்துக் கொண்டு அவர்களை சிறப்பாக கையாள வில்லையென்றே தோன்றுகிறது.

இமான் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணியும் அதிகமாக ஈர்க்கவில்லை. தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது. ஆண்ட்ரியாவை மிகவும் அழகாக காண்பித்திருக்கிறார். சண்டைக் காட்சிகளிலும் இவருடைய கேமரா பளிச்சிடுகிறது.
மொத்தத்தில் ‘வலியவன்’ வலிமை குறைவு.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பல்கலைக்கழக மாணவிகளிடமும் பாலியல் தொல்லையா?: போலீசார் விசாரணை!!
Next post உதயநிதிக்கும் நயன்தாராவுக்கும் மோதல்!!